அநுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட 80 இலட்சம் ரூபா பணம் திரைப்படப் பாணியில் திருடப்பட்டது.
அரச வங்கி ஒன்றுக்காக நேற்றுமுன்தினம் வாகனத்தில் இரகசியமாக எடுத்து வரப்பட்டபோதே பணம் காணாமற்போயுள்ளது.
திருட்டுத் தொடர்பான சந்தேகத்தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழியர்கள் மூவரும் அவர்களுக்குக் காவலுக்குச் சென்ற ஒருவருமாக நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பயணத்தின் இடையில் தேநீர் குடிப்பதற்காகக் கடை ஒன்றுக்குள் சென்று திரும்புவதற்கிடையில் பணம் காணாமற்போயிருந்தது என்று இந்த நால்வரும் தமது வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டிருந்தனர்.
இது குறித்த விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வங்கி ஊழியர்கள் மற்றும் பாதுகாவலரே பணத்தைத் திருடிவிட்டு நாடகமாடுகிறார்கள் என்கிற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
எனினும் அவர்களிடம் இருந்து இதுவரையில் பணம் மீட்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.
வங்கித் தேவைக்கு அவ்வப்போது இப்படி வாகனத்தில் பணம் எடுத்து வரப்படுவது வழமை. அதுபோன்றே அன்றும் அநுராதபுரத்தில் இருந்து 80 லட்சம் ரூபா பணத்துடன் வாகனம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது.
வாகனத்தில் வங்கிப் பணியாளர்கள் மூவரும் அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆயுதம் தாங்கிய காவலர் ஒருவரும் இருந்தனர்.
இடையில் தேநீர் அருந்துவதற்காகக் கடை ஒன்றின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டுத் தாம் உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தால் வாகனத்தில் இருந்த பணம் மாயமாகி இருந்தது என்று வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் என்று பொலிஸார் கூறினர்.
அவர்கள் தேநீர் அருந்த எங்கு இறங்கினர் என்கிற தகவலைத் தெரிவிக்கப் பொலிஸார் மறுத்துவிட்டனர்.
பணம் மாயமானதை அடுத்து ஊழியர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கி முகாமையாளருக்கு அது தொடர்பில் தகவல் தந்தனர்.
அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாடு செய்தார். துரிதமாக விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் பணத்துடன் வந்த ஊழியர்கள் மற்றும் காவலரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அவர்களே பணத்தைத் திருடிவிட்டு நாடகமாடக்கூடும் என்ற கோணத்தில் பொலிஸ் சந்தேகிக்கின்றது. பெருந் தொகைப் பணம் திருடப்பட்டிருப்பதால் இது குறித்துக் குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரும் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
1 Comments
This comment has been removed by the author.
ReplyDelete